துப்பாக்கி - எனது விமர்சனம்
தொடர்ச்சியாக வந்த பெரிய படங்களால் நொந்து போயிருக்கும் போது துப்பாக்கி மூலம் அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது. சூர்யா அஜித் படங்கள் மண்ணை கவ்விய நிலையில் விஜய் படங்களில் மட்டும் புதிதாக என்ன இருந்து விட போகிறது என்ற சாதாரண தரப்பு ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லி ஜெயித்திருக்கிறது துப்பாக்கி.
நீண்ட காலத்துக்கு பிறகு அலட்டல் இல்லாத விஜய்யை படத்தில் ரசிக்க முடிகிறது. காவலன் நண்பன் என இதற்கு முந்தைய படங்களில் இதே அல்லடல் இல்லாத நடிப்பை பார்த்திருந்தாலும் அவை ஏற்கனவே பார்த்த ரீமேக் படங்கள் என்பதால் முழுமையாக இந்த படத்திலே அலட்டல் இல்லாத அடுத்த வீட்டு பையன் போல் இருக்கும் விஜய்யை ரசிக்க முடிகிறது.
படத்தின் கதை இதற்கு முதலே அடித்து துவைத்த தீவிரவாதம்தான் என்றாலும் தொய்வில்லாமல் படமாக்கிய விதத்தில் முருகதாஸ் ஜெயித்திருக்கிறார். ஏழாம் அறிவில் செய்தது போல் இல்லாமல் படத்தை விறு விறுப்பாக கொண்டு சென்றிருப்பது சபாஷ் !!!!
விஜய் - மேலே சொன்னது போல் அலட்டல் இல்லாத நடிப்பு, ஆரவாரம் இல்லாத ஆக்க்ஷன், குறும்புத்தனமான காதல் என்று எந்த இடத்திலும் முகல் சுளிக்க விடாமல் அழகாக செய்திருக்கிறார். ராணுவ உடை அதிகம் இல்லாத காரணத்தாலோ என்னவோ அதுவும் பெரிதான உறுத்தலாக தெரியவில்லை. ஆரவாரமான பஞ்ச் வசனங்கள் சவால் வசனங்கள் இல்லாமல் ராணுவம் பற்றி பேசும் இடங்களில் மீண்டும் விஜய்க்கு ஒரு சபாஷ்..!!!
காஜல் - காதல் காட்சியும் காமெடி காட்சியும் மட்டும்தான் என்றாலும் தனக்கான இடங்களில் அழகாகவே நடித்திருக்கிறார்.
வித்யுத் - அமைதியான வில்லனாக அழகாக நடித்திருக்கிறார். அதிலும் விஜய்யோடு போனில் பேசும் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் வென்றிருக்கிறார். படத்தில் வில்லனுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை ஒரு படி உயர்த்தி காட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது
தீனா, ரமணாவில் இருந்த முருகதாஸ் கொஞ்ச காலமாக காணமல் போயிருந்தார் ஆனால் துப்பாக்கி மூலமாக மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஸ்லீப்பர் செல்ஸ் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு படம் முழுவதையுமே சிறிதும் தொய்வின்றி கொண்டு செல்வது முருகதாசாலேயே முடியும். பொதுவாக ஷங்கர் படங்களில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் தேவையான விடயங்கள் இருக்கும். சங்கருக்கு பிறகு முருகதாஸ் ஜெயித்திருக்கிறார். முக்கியமாக விஜய்யை அலட்டல் இல்லாமல் நடிக்க வைத்ததில்!!
சந்தோஷ் சிவன் தனக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். விஜய்யின் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் படமாக்கிய விதம் அழகு. ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையை மின்னலே, காக்க காக்க காலத்துக்கு பிறகு நான் ரசித்தேன். பல இடங்களில் சொதப்பியிருந்தாலும் விஜய் லேப்டாப்பில் மேப்பை கண்டு பிடிக்கும் காட்சிக்கு அளித்திருந்த பின்னணி இசை கவர்கிறது.
பாடல்களில் ஆடியோவில் கூகுள் கூகுள் பாடலும் போய் வரவா பாடலும் மிகவும் கவர்ந்தது. படமாக்கிய விதத்திலும் எதுவும் குறை கூறுவதற்கு இல்லை. அந்தார்டிகா பாடல் விஜய்யின் குறும்புகளுக்க்காகவே ரசிக்க வைக்கிறது. போய் வரவா இறுதியில் நெகிழ வைக்கிறது.
முதலில் படம் காமெடி காதல் என்று போனாலும் பன்னிரண்டு தீவிரவாதிகளை ஒன்றாக கொல்லும் காட்சியோடு நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதன் பிறகு படத்தின் வேகம் படம் முடிந்த பிறகே தெரிகிறது எனலாம். வழக்கம் போல் மாடிக்கு மாடி தாவி நூறு பேரோடு சண்டை போடும் விஜய்யை காட்டாமல் அடக்கமாக ஆக்க்ஷன் பண்ணும் விஜய்யை ரசிக்க முடிகிறது. தங்கையை கடத்தி செல்லும் காட்சியில் வரும் சண்டையே அதற்கு உதாரணம். கிளைமாக்ஸ் காட்சியிலும் நூறு தீவிரவாதிகளோடு தனியாளாக சண்டை, சண்டை முடிந்த பின் ஒரு பக்கத்துக்கு நாட்டுக்கு அட்வைஸ் என்று இல்லாமல் அமைதியாக முடித்தது அழகாக இருக்கிறது
மொத்தத்தில் மீண்டும் விஜய்யை நல்ல நடிகனாக பார்த்ததில் விஜய் ரசிகனாக மகிழ்ச்சி. ஒரு தரமான சினிமாவை ரசிக்கும் படியாக தந்ததற்காக முருகதாசுக்கு நன்றி
( மகிந்தன் )


No comments:
Post a Comment